வி.ஏ.ஓ.க்கள் முழு இரவு நேர தர்ணா போராட்டம்!

வி.ஏ.ஓ., பணியிடங்களை மறு சீரமைப்பு செய்வது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள், முழு இரவு நேர தர்ணா போராட்டத்தில் பங்கேற்றனர்.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதலை ஒரே அரசாணையின் மூலம் வழங்க வேண்டும். வி.ஏ.ஓ., பணியிடங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும், கணினி வழி சான்றுகள் மற்றும் இணையதள பணிகளுக்கு செலவினத்தொகை மற்றும் வசதிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைககளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தை கடந்த 28-ம் தேதி தொடங்கினர்.அன்று முதல் ஆன்லைன் சான்று பணிகளை முற்றிலும் புறக்கணித்த கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை தாலுக்கா அலுவலகங்கள் முன் முழு இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் வாலாஜாப்பேட்டை, ஆற்காடு ,நெமிலி ,அரக்கோணம் வட்டத்திற்கு உட்பட்ட 41 பெண் அதிகாரிகள் உட்பட 230 கிராம நிர்வாக அதிகாரிகள், கோரிக்கை முழக்கங்களை எழுப்பி வட்டாச்சியர் அலுவலகங்களின் வளாகத்தில் முழுநேர இரவு தர்ணா பேராட்டத்தில் பங்கேற்றனர்.

 விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் சங்கராபுரம், உளுந்தூர் பேட்டை, திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.Loading… புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 10 வட்டாட்சியர் அலுவலகங்களில் 20-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடித்தப் பிறகே போராட்டத்தில் பங்கேற்றதாக வி.ஏ.ஓ.க்கள் தெரிவித்தனர்.

இதே போல் கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் முழு இரவு தர்ணா போராட்டத்தில் பங்கேற்றனர்.

இரவு நேர தர்ணாவை தொடர்ந்து நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளதாகவும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Also see… குளத்தில் விழுந்து ஹெச்ஐவி பாதித்த பெண் தற்கொலை… நீரை வெளியேற்றிய கிராம மக்கள்