ஸ்டெர்லைட் ஆலை: சட்டரீதியாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக சட்டரீதியாக ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கிய தேசியப் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில், ஸ்டெர்லைட் நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பல்வேறு தரப்பிலும் எழுந்த எதிர்ப்பால் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தேசியப் பசுமை தீர்ப்பாயத்தை நாடியது. இது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான நிபுணர் குழு, அறிக்கையை பசுமை தீர்ப்பாயத்திடம் அளித்தனர். அதன் அடிப்படையில் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இதனிடையே, ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆலையை திறக்க வேண்டும் என்ற பசுமைப் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். அத்துடன் ஆலைக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை நிறுத்தி வைத்தனர்.

இதன் மூலம் வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளதாக ஸ்டெர்லைட் ஆலை சிஇஓ ராம்நாத் மகிழ்ச்சி தெரிவித்தார். மாசுகட்டுப்பாட்டு வாரியத்தை அணுக உள்ளதாக அவர் கூறினார்.Loading… ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை எனவும், மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெறும் எனவும் வழக்கில் ஆஜரான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கம் அளித்தார். வழக்கில் தனது மனுவை தமிழக அரசு மனுவுடன் சேர்த்து விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.

பசுமை தீர்ப்பாயத்திற்கு தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய அதிகாரம் இல்லை என தமிழக அரசு வழக்கறிஞர் ராகேஷ் சர்மா வாதாடினார். இந்த வழக்கில் தமிழக அரசு, ஸ்டெர்லைட் நிர்வாகம் பதில்மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக சட்டரீதியாக ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவு எதையும் உச்சநீதிமன்றம் பிறக்கவில்லை என்றார்.

Also see…