1,000 ரூபாய் வாங்க இன்றுதான் கடைசி நாள்: ரேஷன் கடைகளில் திரண்ட மக்கள்!

பொங்கல் பண்டிகைக்கான தமிழக அரசின் பரிசுத் தொகுப்பு மற்றும் 1,000 ரூபாயை பொதுமக்கள் வாங்குவதற்கு இன்றுதான் கடைசி நாள் ஆகும்.

குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசாக, பொங்கல் பொருள்கள் தொகுப்புடன் 1,000 ரூபாய் பணமும் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக, கோவையைச் சேர்ந்த டேனியல் ஜேசுதாஸ் தொடர்ந்த பொது நல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் வழங்க கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய, சர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் வழங்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், தமிழகம் முழுவதுமுள்ள ரேஷன் கடைகளில், பொதுமக்கள் பரிசுப் பொருள்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரி கூறியதாவது: குடும்ப அட்டை வைத்திருக்கும் 95 % பேருக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுவிட்டது. ஜனவரி 14 (இன்று) வரை பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க அரசு அனுமதித்துள்ளது.

பொங்கலுக்கு பிறகு பரிசுப் பொருள்கள் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, பொதுமக்கள் இன்றுடன் பரிசுப் பொருள்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அவர்  தெரிவித்தார்.

Also see:Loading…