ராஞ்சி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் தோனி, ஜாம்பவான்கள் பட்டியலில் இணையும் சாதனையை தவறவிட்டார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடக்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

When the ‘Lion’ walks out to bat in his den #INDvAUS https://t.co/WKRKGpKgaB— BCCI (@BCCI) 1552049636000
கவாஜா கலக்கல்:
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச் (93), கவாஜா (104) கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி, 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 313 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 314 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

தவறவிட்ட தோனி:
கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, துவக்க வீரர் ஷிகர் தவான் (1), ரோகித் சர்மா (14), ராயுடு (2) என டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பலாக வெளியேறினர். அடுத்து உள்ளூர் ரசிகர்களின் ஆக்ரோஷமாக வரவேற்புடன் களமிறங்கிய தோனி, 26 ரன்னில் ஜாம்பா சுழலில் போல்டானார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள், டி-20) அரங்கில் 17,000 ரன்கள் என்ற சாதனையை வெறும் 7 ரன்னில் தோனி தவறவிட்டார். இப்பட்டியலில் ஜாம்பவான் சச்சின் (34,357 ரன்கள்), டிராவிட் (24,208), விராட் கோலி (19,453), கங்குலி (18,575), சேவக் (17,253) ஆகியோர் உள்ளனர்.

காத்திருக்க வேண்டும்:
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்னும் இரண்டு ஒருநாள் போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், அதற்குள் 7 ரன்கள் எடுத்தால், இப்பட்டியலில் இணையலாம். ஆனால் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் தோனி இந்த சாதனையை தவறவிட்டது, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.