மும்பை: உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நான்காவது இடத்துக்கு முன்னாள் தேர்வுக்குழு தலைவர் வெங்சர்கர் சில வீரர்களின் பெயரை தேர்வு செய்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது.

மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் – அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி இத்தொடர் நடக்கவுள்ளது.

10 அணிகள் பங்கேற்பு….
இத்தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தரவரிசைப்படியும், வெஸ்ட் இண்டீஸ், மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யபட்டது.

பரபரப்பு அதிகம்:
இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கு முன்பாக இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் டிராபால்கர் சதுக்கத்தை இணைக்கும் மாலில் உலகக்கோப்பைக்கான துவக்க விழாவை பிரமாண்டமாக துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

யார் அந்த வீரர்?
இந்நிலையில் இந்திய அணியின் நான்காவது இடத்துக்கு முன்னாள் தேர்வுக்குழு தலைவர் வெங்சர்கர் சில வீரர்களின் பெயரை தேர்வு செய்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வெங்சர்கர் கூறுகையில், ‘இந்திய அணியில் நான்காவது வீரராக களமிறங்கி அசத்த, பல வீரர்கள் உள்ளனர். குறிப்பாக கே.எல். ராகுல், அஜின்கியா ரகானே அந்த இடத்துக்கு சிறப்பாக செயல்படுவார்கள். அதேநேரம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மாயங்க் அகர்வால் சிறப்பாக செயல்பட்டார்.

கோப்பை கிடைக்குமா?
என்னைப்பொறுத்த வரையில் இந்திய அணி நிச்சயமாக கடைசி 4 அணிகளில் ஒரு அணியாக இருக்கும். இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக உள்ளது. கடைசியாக சில காலம் இந்திய அணி தோல்வியை சந்திக்க போட்டியின் கடைசி 10 ஓவரில் சொதப்புவதே காரணமாக இருந்தது. தற்போது பும்ரா உள்ளிட்ட வீரர்கள் உள்ளதால் இந்த நிலை மாறும் என நம்புகிறேன்.’ என்றார்.