உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு நாடும் தங்களின் அணிகளை அறிவித்து தயாராகி வருகின்றன. உலகக் கோப்பைக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி சார்பில் கேப்டன் விராட் கோலி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட அணி வரும் ஏப்ரல் 15ம் தேதி மும்பையில் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

முன்னதாக ஏப்ரல் 23ம் தேதி இந்திய அணி அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், 8 நாட்களுக்கு முன்னரே ஏப்ரல் 15ம் தேதி இந்திய அணி அறிவிக்கப்படும் என பிசிசிஐ இன்று தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஜூன் 5ம் தேதி விளையாட உள்ளது.

கோலி ஏமாற்றம்:
ஐபிஎல் தொடரில் விராட் கோலி கேப்டனாக இருக்கும் பெங்களூரு அணி தொடர்ச்சியாக 6 தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் கோலியின் மீது அதிருப்தியில் உள்ளனர். அதே போல் இந்திய அணியில் 4வது இடத்தில் விளையாடும் ராயுடு சொதப்பி வருவதால் அணியின் வரிசை மாறும் என தெரிகிறது.

முன்னதாக ஐபிஎல் செயல்பாடு உலகக் கோப்பை அணி தேர்வு பாதிக்காது என அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்திய அணியின் தேர்வு எப்படி இருக்குமோ என பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

எதிர் பார்க்கப்படும் உத்தேச இந்திய அணி வீரர்கள்:சிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, அம்பதி ராயுடு, ரஹானே, விஜய் சங்கர், எம்.எஸ் தோனி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, முகமது சமி, புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்தீப் யாதவ், சஹால், குர்ணால் பாண்டியா / ரவீந்திர ஜடேஜா.