விண்டோயிக்: நமிபியாவில் நடக்கும் உலக கிரிக்கெட் லீக் டிவிசன் 2 பிரிவில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு ஐசிசி., ஒருநாள் கிரிக்கெட் அந்தஸ்து அளித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் (ஐசிசி.,) உறுப்பு நாடுகளுக்கு இடையே நமிபியாவில் உலக கிரிக்கெட் லீக் டிவிசன் 2 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இத்தொடரில் ஓமன், அமெரிக்கா, நமிபியா, ஹாங் காங், கனடா, பப்புவா நியூகினியா என ஆறு அணிகள் பங்கேற்கிறது.

உலகக்கோப்பை வாய்ப்பு:
இதில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிகள் 2019-21 ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை லீக் 2 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் ஐசிசி.,யின் ஒருநாள் அந்தஸ்து பெற்ற நேபால், ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுடன் இந்த நான்கு அணிகள் தற்காலிகமாக ஒருநாள் அந்தஸ்து பெற்று போட்டிகளில் பங்கேற்கும்.

2 ஆண்டுகள்:
இதில் தகுதி பெறும் அணிகள் வரும் 2023ல் இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். இத்தொடரின் முடிவில் தற்போதுள்ள 16 ஒருநாள் அந்தஸ்து பெற்ற அணிகளுடன் கூடுதலாக 4 அணிகள் தற்காலிகமாக ஒருநாள் அந்தஸ்து வழங்கப்பட்டு மொத்தம் 20 அணிகள் ஐசிசி., தரவரிசையில் இடம் பெறும்.

36 போட்டிகள்:
இதில் அமெரிக்கா, ஓமன் அணிகளின் இடம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த 2 ஆண்டுகளில் அமெரிக்க அணி ஒருநாள் அந்தஸ்து பெற்று 36 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

15 ஆண்டுக்கு பின்….
கடைசியாக அமெரிக்க அணி கடந்த 2004ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் தற்காலிகமாக ஒருநாள் அந்தஸ்து பெற்று கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றது.