22 ஆண்டுகால திருமண வாழ்வு: வைரலாகும் பிரியாங்கா காந்தியின் காதல் கதை!

பிரியங்கா காந்தி வதேரா நேற்றிலிருந்து இணையதளங்களில் அதிகம் தேடப்படும் பெயராக உள்ளது. பிரியங்காவின் கல்வி, காதல், குடும்பம், குழந்தைகள், ராசி, நட்சத்திரம் என அனைத்தையும் மக்கள் கூகுளில் தேடி வைரலாக்கி வருகின்றனர்.

இணையத்தில் பிரியங்கா- ராபர்ட் வதேரா தம்பதியரின் காதல் காவியமும் வைரலாகி வருகிறது. நேற்று காங்கிரஸ் கட்சியில் புதிய பொறுப்பு பெற்றுள்ளார் பிரியங்கா காந்தி. கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்காவைப் பாராட்டி அவரது கணவர் ராபர்ட் வதேரா தனது ட்விட்டர் பக்கத்தில், ”வாழ்த்துகள். என்றும் உன் அருகில் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும்… சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்!” எனப் பகிர்ந்திருந்தார்.

இதுதான் பிரியங்கா- ராபர்ட் காதல் கதையை மீண்டும் பேச வைத்துள்ளது. ராபர்ட் வதேராவின் சகோதரி மிச்சேலும் பிரியங்காவும் ஒரே பள்ளியில் பயின்றவர்கள். நெருங்கிய தோழியான மிச்சேல் மூலம் பிரியங்காவுக்கு அறிமுகமானவர் தான் ராபர்ட் வதேரா. தன்னுடைய 13-ம் வயதில் ராபர்ட் உடன் நண்பராக அறிமுகமானார் பிரியங்கா.

பலத்த பாதுகாப்புடன் எப்போதும் வலம் வரும் பிரியங்காவை சாதரண ஒரு பெண்ணாக நடத்திய ராபர்ட்டின் குணம் தான் பிரியங்காவுக்கு முதலில் பிடித்ததாம். அதானல் தான் அவருடன் நெருங்கிய நட்பு கொண்டாராம். கொஞ்சம் கொஞ்சமாக நட்பு காதலான போது முதலில் காதலைச் சொன்னவர் ராபர்ட் என சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில செய்தித்தாளுக்கு அளித்தப் பேட்டியில் பகிர்ந்துள்ளார் பிரியங்கா.

காதல், கேர்ள் ப்ரெண்டு என இழுக்காமல் நேரடியாகத் திருமணம் செய்துகொள்ளலாமா? என அனுமதி கேட்ட ராபர்ட் வதேராவிடம் உடனே சம்மதம் தெரிவித்து நீண்ட கால நண்பரைக் கரம் பிடித்தார் பிரியங்கா. ராபர்ட்- பிரியங்கா திருமணத்துக்குக் காரணமான ராபர்ட்டின் சகோதரி மிச்சேலின் மரணம் இருவரையும் வெகுவாகப் பாதித்தது. தொடர்ந்து ராபர்ட்டின் குடும்பத்தில் மரணங்கள் தொடர காதல் கணவரின் பக்கபலமாக நின்றுள்ளார் பிரியங்கா.

எதிலும் நேர்த்தியை விரும்பும் பிரியங்கா தன் இரண்டு குழந்தைகளுக்கும் தன் கையால் மட்டுமே சமைத்து வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒரு குடும்பத் தலைவியாக மிகச் சிறப்பாக செயல்பட்ட பிரியங்கா இனி அரசியலிலும் தனது சிறப்பை வெளிப்படுத்துவார் என ஒட்டுமொத்தக் குடும்பமும், கட்சியும் பிரியங்காவைக் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் பார்க்க: அஜித்… அரசியல்… சர்ச்சைகள்