9 ஆண்டுகளாக இயங்கிய போலி மருத்துவ பல்கலை.க்கு சீல்!

மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் இயங்கி வந்த போலி மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

நாகை மாவட்டம் திருவேள்விக்குடி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், குத்தாலத்தில் அகில உலக திறந்தவெளி மாற்றுமுறை மருத்துவ பல்கலைக்கழகம் என்ற பெயரில் கல்வி நிறுவனத்தை நடத்தி வந்தார்.தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஆயுர்வேதம், மற்றும் சித்த மருத்துவத்துறைகளில் பட்டம் பெற்றுள்ளனர்.

இதற்குரிய வகுப்புகளை நடத்தாமலும், செய்முறை பயிற்சி அளிக்காமலும், செல்வராஜ் அளித்த சான்றிதழ்களை பெற்ற 900 போலி மருத்துவர்கள், மாற்றுமுறை மருத்துவர் என்ற பெயரில், சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக, நாளிதழ் ஒன்றில், அவர் அளித்த விளம்பரம் வெளியிட்டிருந்தார்.

அதனைப் பார்த்து மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குநரகத்தின் துணை கண்காணிப்பாளர் தாமஸ் பிரபாகர் தலைமையிலான அதிகாரிகளும், பத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களும் திருவேள்விக்குடி சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், ஏராளமான போலிச் சான்றிதழ்கள் கைப்பற்றிய அதிகாரிகள், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் உதவியுடன் அந்த போலி பல்கலைக்கழகத்தை மூடி சீல் வைத்தனர். கடந்த 9 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான போலி மருத்துவ சான்றிதழ்கள் வழங்கியது அம்பலமாகியுள்ளது.Loading… Also see…