டெல்லியில் அவசர தரையிறக்கம் ரஷ்யா விமானம்

வியட்நாமில் இருந்து ரஷ்யா சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் உடனடியாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

வியட்நாம் நாட்டின் பூ-கியோயே நகரில் இருந்து ரஷ்யாவின் யெகாடெரின்பர்க் நகரை நோக்கி இன்று மாலை ஒரு பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 345 பயணிகள் மற்றும் ஊழியர்கள் பயணம் செய்தனர்.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.
இதனால் அருகில் உள்ள டெல்லி விமான நிலையத்தை தொடர்பு கொண்ட அவர், அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார்.
இதையடுத்து அந்த விமானம் தரையிறங்க உடனடியாக அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் விமான ஓடுதளத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.
அனுமதி கிடைத்ததும் டெல்லி விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. உடனடியாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அந்த விமானத்தை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
உரிய நேரத்தில் விமானத்தை டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கியதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.