ராகுல் காந்தி 6-வது கட்ட பிரசாரம்

கர்நாடக மாநிலம் சட்ட சபைக்கு அடுத்த மாதம் (மே) 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

அங்கு ஆட்சியை கைப்பற்றுவதற்கு காங்கிரஸ் பா.ஜ.க. இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் முதல்- அமைச்சர் சித்தராமையா தலைமையில் நடக்கும் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிகவும் தீவிரமாக உள்ளார்.

காங்கிரசுக்கு தற்போது இந்தியாவில் இந்த ஒரு பெரிய மாநிலம்தான் ஆளும் கட்சி மாநிலமாக உள்ளது.

எனவே கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவதை ராகுல் கவுரவ பிரச்சினையாகவும் எடுத்துள்ளார்.

இதனால் சுமார் 1½ மாதங்களுக்கு அவர் பெல்லாரி நகரில் பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்த உள்ளார்.

இதுவரை கர்நாடகாவில் ராகுல் காந்தி 5 கட்டமாக பிரச்சாரம் செய்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) அவர் தனது 6-வது கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

இன்றும், நாளையும் கோலார், சிக்பல்லப்பூர் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்யும் ராகுல்காந்தி நாளை தனது பிரச்சாரத்தை பெங்களூரில் நிறைவு செய்கிறார்.

பெங்களூர் புறநகர் பகுதிகளை குறிவைத்து அவர் தீவிரமாக ஆதரவு திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

6 கட்ட பிரச்சாரம் மூலம் ராகுல்காந்தி கர்நாடக மாநிலம் முழுவதையும் சுற்றுப்பயணம் செய்து நிறைவு செய்கிறார்.

கர்நாடகாவில் மொத்தம் 30 மாவட்டங்களில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இதில் 90 சதவீதத்தை ராகுல் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு இன்னும் 1 மாதம் உள்ள நிலையில் மீண்டும் ஒரு தடவை கர்நாடகா மாநிலம் முழுவதும் சுற்றி வர ராகுல் திட்டமிட்டுள்ளார்.

ராகுலின் தீவிர பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் வரும் நாட்களில் புதுமையான பிரச்சாரங்களில் ஈடுபட பா.ஜ.க. தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பெங்களூர் வந்து முகாமிட்டுள்ளார்.

பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம் முழுவதும் 25 பொதுக்கூட்டங்களில் பேச அவர் ஏற்பாடு செய்துள்ளார்.