செல்லூர் ராஜூ ஆவேசம் காவிரி பிரச்சினை எதிர்க்கட்சி ஆட்சியில் கண்டுக்கொள்ளவில்லை இப்போ நாடகமாடுகிறார்கள்

காவிரி பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் கபட நாடகமாடுகிறார்கள் என்று பூங்கா திறப்பு விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

மதுரை விளாங்குடி பகுதியில் மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.42 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா இன்று நடந்தது. கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர் முன்னிலை வகித்தார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ பூங்காவை திறந்து வைத்து பேசியது:-

மறைந்த ஜெயலலிதா வழியில் செயல்பட்டுவரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு தமிழகத்தின் உரிமைகளை போராடி பெற்று வருகிறது.

மக்களின் தேவைகளை அறிந்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வரும் இந்த அரசின் முயற்சிக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.

இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள பூங்காவை அரசு சொத்தாக நினைக்காமல் பொதுமக்கள் உங்கள் சொத்தாக நினைத்து பராமரிக்க வேண்டும்.

மதுரை நகரில் குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க ரூ.1140 கோடி மதிப்பில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

வைகை அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால் நகர் பகுதியில் 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீரில் சாக்கடை கலந்து வருவதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை போராடி பெற்று வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம்.

ஆட்சியில் இருந்தபோது துரும்பைக்கூட கிள்ளிப் போடாத தி.மு.க., தற்போது அரசியல் சுயலாபத்திற்காக போராடுவதுபோல் கபட நாடகம் ஆடி வருகிறார்கள்.

இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது அங்கம் வகித்த தி.மு.க. அப்போது நினைத்திருந்தாலே காவிரி பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருக்கும்.

ஆனால் அவர்கள் எந்த இலாகாவை பெறுவது? என்பதிலேயே குறிக்கோளாக இருந்தார்கள்.

தற்போது மக்களுக்காக பாடுபடுவதாக கூறி வருகிறார்கள். இந்த கபட நாடகம் ஒருபோதும் எடுபடாது.