வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்-மீனவர்களுக்கு எச்சரிக்கை

வானிலை மாற்றம் காரணமாக இந்திய பெருங்கடலில் குமரிக்கு தெற்கே, 3 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.
இது வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. அது மேலும் வலுவடைந்து வருகிறது.
புயல் சின்னமாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மீனவர்கள் செல்ல வேண்டாம்
இந்திய பெருங்கடல் பகுதியில் குமரிக்கு தெற்கே, மாலத்தீவு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று உள்ளது.
இது இன்று (நேற்று) இரவுக்குள் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியை நோக்கி நகரும். பின்னர், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று லட்சத்தீவை நோக்கி நகரும்.
எனவே அடுத்து வரும் 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) குமரி கடலோரம், கேரளாவின் தென்பகுதி மற்றும் மாலத்தீவில் கடல் அலை கொந்தளிப்பாக காணப்படும். மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். லட்சத்தீவுகள் வரை காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தீவிரம் நீடிக்கும்.
எனவே மன்னார்வளைகுடா முதல் லட்சத்தீவுகள் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தால், அவர்கள் உடனடியாக அருகே உள்ள கரைப்பகுதிகளுக்கு சென்று விட வேண்டும்.
இதன் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் 14-ந் தேதி (இன்று) மற்றும் 15-ந் தேதி (நாளை) அநேக இடங்களில் மழை பெய்யும். இதில் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
மழை அளவு
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) 4 செ.மீ., தொண்டி 2 செ.மீ., பாம்பன், கமுதி, மணிமுத்தாறு, சேரன்மகாதேவி, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, அம்பாசமுத்திரம், ராமேசுவரம், கோவில்பட்டி, தூத்துக்குடி, சிவகாசி தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
கேரளா முதல்-மந்திரி ஆலோசனை
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருப்பதன் காரணமாக கேரள மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.