ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு அளிப்பது ஏன்? உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், ஆலைக்கு பாதுகாப்பு அளிப்பது பற்றி நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி எஸ்.பி.க்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த 50 நாட்களாக போராடி வருகின்றனர்.

ஆலைக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்துவோம் என மிரட்டல் வருவதால் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் நிர்வாகம் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் போராட்டத்தின் பின்னணியில் சதி இருப்பதாகவும், இதனால் ஆலைக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் வாதாடினர்.

அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், “போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதனை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது குறித்து நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி எஸ்.பி.க்கு உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்தார்.